அறிவியலையும் அன்றாட வாழ்க்கையையும் பிரிக்க முடியாது, பிரிக்கவும் கூடாது. - விஞ்ஞானி ரோசலிண்ட் ஃப்ராங்ளின்.
எங்கும் அறிவியல். எதிலும் அறிவியல். அறிவியல் இன்றி உலகம் இல்லை. அறிவியல் இன்றி எதுவும் இல்லை. அறிவியலுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று கேள்விகளைக் கேட்க வைப்பதும் அறிவியல். அந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடிச் செல்ல வைப்பதும் அறிவியல். தேடிய விஷயங்களைப் பரிசோதனைக்கு உள்படுத்துவதும் அறிவியல். அந்தப் பரிசோதனைகளின் இறுதியில் இதுதான் உண்மை என்கிற ஒரு முடிவுக்கு வருவதும் அறிவியல்.
அறிவியல் சுவாரசியமானது. அந்த சுவாரசியத்தால்தான் கேள்விகள் பிறக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கு விடைகளும் கிடைக்கின்றன. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அறிவியல் உண்மைகளைக் கண்டறியலாம்.
காந்தியோ ஐன்ஸ்டைனோ உங்கள் உறவினர் என்று சொன்னால், உடனே ‘அது எப்படி?’ என்கிற ஆச்சரியமான கேள்வி தோன்றும். அதற்கான விடையைத் தேடும்போது, உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் காரணமாகச் சிறு சிறு மரபணுத் தகவல் வேறுபாட்டைக் கொண்டவர்கள், ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவரும். அப்படி என்றால் காந்தியோ ஐன்ஸ்டைனோ மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் நமக்கு உறவினர்தானே!